தூத்துக்குடியில் சுமார் ரூ 200 கோடி மதிப்பிலானvமதுரா கோட்ஸ் நிலம் விற்பனை விவகாரத்தில் எழும் சர்ச்சை :மதுரா கோட்ஸ் மீட்பு குழு தலைவர் வி. அலங்கார பரதர் தலைமையில் நிர்வாகிகள் வெளியிட்ட தகவல்களால் பெரும் பரபரப்பு!!!!
தூத்துக்குடி, ஜன, 21

தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை, முத்துநகர் பூங்கா எதிரே அமைந்துள்ள மதுராகோட்ஸ் பிரைவேட் லிமிடெட் கட்டிடம் மற்றும் அதனைச் சார்ந்த நிலம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 4 ஏக்கர் 67 சென்ட் பரப்பளவு கொண்ட இந்த இடம் அரசு நிலமா அல்லது தனியாருக்கு சொந்தமானதா என்ற கேள்வி தற்போது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடத்தை “வேலவன் பிராபர்டிஸ்” என்ற பெயரில் DTCP அனுமதி இன்றி பொது விற்பனைக்கு கொண்டு வந்து, முன்பதிவு மேளா நடத்தப்பட்டதாக மதுராகோட்ஸ் மீட்பு தலைமைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக தினசரி நாளிதழ்கள், டிஜிட்டல் ஊடகங்கள், வானொலி, சுவரொட்டிகள், வாகன ஒலிபெருக்கிகள் மூலம் மக்கள் மத்தியில் பரவலான விளம்பரங்கள் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக 10.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட நகர ஊரமைப்பு (DTCP) அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து முன்பதிவுகளை நிறுத்தவும், விளம்பரங்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும், மதுராகோட்ஸ் கட்டிடம் கடலோர ஒழுங்குமுறை சட்டத்திற்கு (CRZ) புறம்பாக அமைந்துள்ளதாகவும், கட்டிடத்தின் கீழ் பூமிக்கடியில் சுரங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் குழுவினர் தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாடு சுரங்க நிலவியல் துறையின் அனுமதி பெறப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
லேண்ட் மார்க் அரசு பதிவேட்டில் இந்த நிலம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பத்திர பதிவு ஆவணங்களில் 100 சதவீத முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சர்வே எண்களில் இனி எந்தப் பதிவும் செய்யக் கூடாது என பத்திர பதிவு அலுவலகத்தில் தடங்கல் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பல மனுக்கள் அளித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதன் காரணமாக கோடிக்கணக்கான மதிப்புள்ள கட்டிட உபகரணங்கள் இரவோடு இரவாக கொள்ளையடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மதுராகோட்ஸ் நிலம் அரசு நிலமாக உறுதி செய்யப்பட்டால், கட்டிடத்தை இடிக்காமல் நீதிமன்றம், கல்லூரி, அருங்காட்சியகம் போன்ற பொது பயன்பாட்டு கட்டிடமாக மாற்றி, ‘தூத்துக்குடி கோரல் மில்’ என்ற பெயரில் நினைவுச் சின்னமாக உருவாக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வ கட்சிகளிடமும் எடுத்துச் செல்ல உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மதுராகோட்ஸ் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இந்த செய்தியாளர் சந்திப்பில்vமதுராகோட்ஸ் மீட்பு தலைமைக்குழு தலைவர் வி. அலங்கார பரதர்,செயலாளர் கிதர் பிஸ்மி,பொருளாளர் காதர் பாட்ஷா, ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன், மீட்புக் குழு கண்ணன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.