பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை 64 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி!!
பழனி,செப், 23

பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை 64 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. ஜூலை 20 முதல் நடைபெற்ற வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ரோப்கார் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புகழ் பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ள மலைக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோப் கார் நிலையத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி கடந்த 64 நாட்களாக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப் காரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது பெட்டிகளில் தலா 250 கிலோ கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. இதனை வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் தொடங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை மீண்டும் தொடங்குவதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது கோவில் இணை ஆணையர் உதவியாளர் லட்சுமி நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராஜ் ,சரத் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு :
ரவிச்சந்திர பூபதி
தலைமை நிருபர்
சென்னை